சேலம்: சாலை விபத்தில் பெண் உட்பட மூவர் உயிரிழப்பு
ஓமலூரை அடுத்துள்ள தொப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்டத்தில் உள்ள தொப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சித்தராஹள்ளி பகுதியை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் மணி. கட்டடத் தொழிலாளியான இவர், தனது தாய் முனியம்மாள், உறவினர் சபரி ஆகியோருடன் நாமக்கல் மாவட்டத்திற்கு கட்டட வேலைக்கு சென்றுள்ளார்.
பணிகள் முடிந்த பின்னர் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் நாமக்கல்லில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது ஓமலூரை கடந்து தொப்பூர் அருகேயுள்ள மேச்சேரி பிரிவு சாலை பகுதியில் வரும்போது, சாலையோர தடுப்பான் இருந்த நிலையில் இருசக்கர வாகனத்தை மணி சற்று திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்சக்கரத்தில் தடுக்கி விழுந்தனர். இதில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.
எதிர்பாராத இந்த விபத்தில் மூன்று பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் பிரபாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.