விழுப்புரம் சம்பவம் எதிரொலி : சேலத்தில் லாட்டரி விற்ற குடும்பம் கைது
விழுப்புரம் சம்பவம் எதிரொலியாக சேலத்தில் லாட்டரி விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் லாட்டரி சீட்டுகளை நம்பி வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தம்பதி மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சேலத்தில் லாட்டரி விற்பனையை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, சோளம்பள்ளம் பகுதியில் 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்திரா, அவரது மகன் பாரதி, மருமகள் பிரியா மற்றும் சந்திராவின் தங்கை சங்கீதா ஆகியோரை சூரமங்கலம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வீட்டிலேயே ஒரு நம்பர் லாட்டரியை, ஒரு பேப்பரில் எழுதி கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதேபோன்று சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் லாட்டரி வியாபாரத்தை முற்றிலுமாக தடுக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.