விஜயகாந்த் உருவ பொம்மைக்கு இறுதிச் சடங்கு.. சொர்க்க ரதத்தில் கொண்டு சென்று சுடுகாட்டில் நல்லடக்கம்
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானதைத் தொடர்ந்து, அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், பல மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், விஜயகாந்த்தின் உருவ பொம்மை ஒன்றை செய்து, அதற்கு சடங்குகளை செய்து சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.
சேலத்தில் தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கேப்டன் விஜயகாந்த் உருவத்தை போலவே உருவ பொம்மை செய்து, அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்கள் துக்கம் அனுசரித்தனர். தொடர்ந்து, பெண்கள் ஒப்பாரி பாடல் பாடி கண்ணீர் மல்க அழுது அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் அவரது உருவபொம்மையை வைத்து, தொண்டர்கள் மொட்டை அடித்து இறுதி சடங்குகள் செய்தனர். மேலும், சொர்க்க ரதம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் பொம்மையை வைத்து ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்று தீவட்டிப்பட்டி சுடுகாட்டில் அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்தனர். தீவட்டிப்பட்டியில் இருந்து சுடுகாடு வரை ஊர்வலமாக சென்ற உருவ பொம்மை ஊர்வலத்தை அங்குள்ள பொதுமக்கள் வழிநெடுக காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். இறுதியாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விஜயகாந்த் உருவ பொம்மையை அடக்கம் செய்தனர். இந்த நிகழ்வு கிராம மக்களிடையே விஜயகாந்த் மீதான பற்றுதலை வெளிபடுத்தும் வகையில் அமைந்திருந்தது.