ஒரே பகுதியில் தொடர் கொள்ளைகள் : சிசிடிவி காட்சியிருந்தும் போலீஸார் அலட்சியப்படுத்துவதாக புகார்

ஒரே பகுதியில் தொடர் கொள்ளைகள் : சிசிடிவி காட்சியிருந்தும் போலீஸார் அலட்சியப்படுத்துவதாக புகார்
ஒரே பகுதியில் தொடர் கொள்ளைகள் : சிசிடிவி காட்சியிருந்தும் போலீஸார் அலட்சியப்படுத்துவதாக புகார்

சேலத்தின் ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தின் மத்திய பகுதியில் இருக்கும் காமராஜர் நகர் பகுதியில், தனியார் பள்ளி ஆசிரியை வசுமதி வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பீரோவை உடைத்து 5 சவரன் தங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன் அதே பகுதியை சேர்ந்த பிரேமா என்ற ஆசிரியர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டுள்ளது. 

மேலும், ஓமலூர் நீதிமன்றம் அருகே உள்ள மோகன் என்பவரின் வீட்டு கேட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருக்கிறது. இதேபோன்று ஓமலூர் நகர பகுதியில் மட்டும் இரண்டு நாட்களில் ஆறு வீடுகளில் நகை, பணம், மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியின் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால் திருட்டு குறித்து நடவடிக்கை எடுக்காமல் போலீசார் பாதிக்கப்பட்ட மக்களையே மிரட்டுவதாக கூறப்படுகிறது. 

இதனால், பலரும் நடந்த திருட்டு குறித்து புகார் கொடுக்காமலேயே திரும்பி வந்துள்ளனர். மூன்று இடங்களில் நடந்த திருட்டின் சிசிடிவி கேமரா காட்சிகளை கொடுத்தும் போலீசார் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஒரு சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றியுள்ள போலீஸார், அதைக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com