தள்ளுவண்டி கடையில் அராஜகம் செய்த நகராட்சி ஆணையர்
மேட்டூரில் உள்ள தள்ளுவண்டி கடையில் அத்துமீறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தள்ளுவண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு முன் சாலை அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால், வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்றி, தற்காலிகமாக தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த மேட்டூர் நகராட்சி ஆணையர் நாராயணன் எவ்வித முன்னறிவிப்புமின்றி பால், தண்ணீர் உள்ளிட்டவற்றின் மீது ரசாயனம் கலந்த பினாயிலை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அடாவடியில் ஈடுபட்ட ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஆணையர் நாராயணன் மீது நாயை கொடூரமாக கொன்றது தொடர்பாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.