Salem District assembly constituency updates
Salem web

அதிமுகவின் எஃகு கோட்டை ‘சேலம்’.. தொகுதிகளின் நிலவரம் என்ன?

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத அதிகார மையமாக விளங்கும் சேலம் மாவட்டத் தொகுதிகளின் அரசியல் களம் குறித்து பார்க்கலாம்.
Published on
Summary

சேலம் மாவட்டம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம், மூன்று முதல்வர்கள், மாடர்ன் தியேட்டர்ஸ் என அரசியல்–கலாசார வரலாற்றில் தனித்த இடம் பெற்றது. 11 தொகுதிகளில் எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக நீண்டகால ஆதிக்கம் செலுத்துகிறது. வன்னியர், பட்டியலின, பழங்குடியினர், சிறுபான்மையினர் வாக்குச்சூழலை யார் கையாள்கிறார்களோ அவர்களுக்கே அடுத்த தேர்தலில் முன்னிலை வாய்ப்பு அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

நீதிக்கட்சி திராவிடர் கழகமாக உருவெடுத்ததும், புகழ்பெற்ற 'மாடர்ன் தியேட்டர்ஸ்' இயங்கியதும் இந்த மண்ணில்தான். சுப்பராயன், ராஜாஜி, எடப்பாடி பழனிசாமி என மூன்று முதல்வர்களை தந்த பெருமையும் உண்டு. மாங்கனி, வெள்ளிக்கொலுசு, இளம்பிள்ளை சேலைகள் எனப் புவிசார் அடையாளங்களுடன், மேட்டூர் அணை மற்றும் ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களும் இங்குப் பிரபலம். சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை கெண்டுள்ளது சேலம். 3 தனித்தொகுதிகள் உட்பட 11 தொகுதிகள் சேலம் மாவட்டத்தில் உள்ளன.

EPS
EPSX

எடப்பாடி தொகுதி: முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்தத் தொகுதி என்பதையும் தாண்டி, கடந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை அதிமுகவை வெற்றிபெறச் செய்து அக்கட்சியின் இதயத்துடிப்பாகத் திகழ்கிறது எடப்பாடி ். அதேபோல், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 2.91 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட ஓமலூர் தொகுதியில் அதிமுக 8 முறை வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது.

மலைப்பிரதேசமான ஏற்காடு தொகுதியிலும், கடந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை அதிமுகவே வெற்றி வாகை சூடியுள்ளது.

yercaud
Yercaud web

ஆத்தூர் தொகுதி: தனித்தொகுதியான ஆத்தூரில் ஒரு காலத்தில் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே சமபலப் போட்டி நிலவியது. ஆனால், கடந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை அதிமுக வெற்றி பெற்று அத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

கெங்கவல்லி தொகுதி: புதிதாக உருவாக்கப்பட்ட தனித்தொகுதியான கெங்கவல்லி தொகுதியிலும் அதிமுக இரண்டு முறை வென்றுள்ளது. தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த மேட்டூர் தொகுதியில் மட்டும் அதிமுக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையே வெற்றி வாய்ப்புகள் மாறி மாறிப் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஐந்து தேர்தல்களில் அதிமுகவும் பாமகவும் தலா இரண்டு முறை இங்கு வெற்றி பெற்றுள்ளன.

சங்ககிரி தொகுதி: சங்ககிரி தொகுதியைப் பொறுத்தவரை, அதிமுக 8 முறை வென்று தனது கோட்டையாக மாற்றியுள்ளது. மாநகரப் பகுதிகளான சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு தொகுதிகளிலும் அதிமுகவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. குறிப்பாக, சேலம் தெற்கு தொகுதியில் உருவானது முதல் அதிமுகவே தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது.

mettur dam
mettur dam web

சேலம் வடக்கு தொகுதி: சேலம் வடக்கு தொகுதி மட்டும் திமுகவின் நம்பிக்கையாக விளங்குகிறது; இங்கு கடந்த மூன்று தேர்தல்களில் இரண்டு முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.

வீரபாண்டி தொகுதி: வரலாற்று ரீதியாகப் புகழ்பெற்ற வீரபாண்டி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும், கடந்த ஐந்து தேர்தல்களில் இரண்டு முறை அதிமுகவும் இரண்டு முறை திமுகவும் வென்று சமபலத்துடன் உள்ளன.

சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் அதிமுகவின் ஆதிக்கம் தொடரும் நிலையில், அதன் பின்னணியில் உள்ள சமூகக் காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் வன்னியர் சமுதாய வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. அதேவேளை, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தனித் தொகுதிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகள் பிரதானமாக உள்ளன.

Salem
Salem web

மாநகரப் பகுதிகளான சேலம் தெற்கு மற்றும் வடக்கில் சிறுபான்மையினர் உள்ளிட்ட பலதரப்பட்ட சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கின்றனர். இந்தச் சமூகக் கட்டமைப்பைச் சரியாகக் கையாளும் கட்சிகளுக்கே வரும் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாகத் திகழ்வதும், அதனைத் தகர்க்க திமுக கடுமையான போராட்டத்தை முன்னெடுப்பதும் கள யதார்த்தமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com