“அதிக மயக்க மருந்தே காரணம்..”.. பிரசவத்துக்கு பின் இறந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம்
சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற இளம்பெண் உயிரிழந்தார். மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி (34), நிறைமாத கர்ப்பியாக இருந்த இவர், கடந்த 24 ஆம் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அடுத்த நாளே கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட கலைவாணி நேற்றிரவு திடீரென உயிரிழந்தார்.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தாலும், மயக்க மருந்து அதிகளவில் கொடுத்ததாலும் கலைவாணி உயிரிழந்ததாகக் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பிரசவித்த பெண்ணை மருத்துவமனை வளாகத்தில் ஒவ்வொரு பரிசோதனைக்கும் செவிலியர்கள் உதவியில்லாமல் நடந்தே அழைத்துச் சென்றதால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
உயிரிழந்த கலைவாணிக்கு மனநிலை பாதிப்பு மற்றும் தைராய்டு பிரச்னை இருந்த காரணத்தால் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.