சிறுமியை கொன்று பாத்திரத்தில் அடைத்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சேலம் மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தெலுங்கனூர் பகுதியைச் சேர்ந்த மீனவர் குருநாதன். இவரது 6 வயது மகள் கடந்த 2016ம் ஆண்டு அப்பகுதியிலுள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி மாலை சிறுமி காணாமல் போனார். பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேடினர். மறுநாள் காலை அதேபகுதியைச் சேர்ந்த ரூபா என்பவர் வீட்டின் பூஜை அறையில் பாத்திரம் ஒன்றில் திணிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரூபாவின் மகன் திருமூர்த்தி, சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்து, பின்னர் உடலை கிழித்து கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் நடந்தபோது திருமூர்த்திக்கு 16 வயது என்பதால், அவரை கைது செய்த காவல்துறையினர், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி விஜயகுமாரி இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, திருமூர்த்திக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை பெற்றவர் மைனர் என்பதால், 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், 7 ஆண்டுகள் சிறையிலும் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரனுக்கு 10 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது அதிருப்தி அளிப்பதாக, அச்சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.