சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி என புகார் - தலைமையாசிரியர் வீட்டில் ரெய்டு
சேலம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை மலை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றிவந்த காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல தரப்பினரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தனித் தனியாக புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சேலம் சூரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர், 2015ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கியதாக 56 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திலும் தலைமையாசிரியர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வெங்கடேசன் தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தொடர் புகார்கள் வந்ததை அடுத்து அவரது வருவாய் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான விசாரணையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், கடந்த நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையின் பிடியில் சிக்கியுள்ள தலைமையாசிரியர் வெங்கடேசன் மீது பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.