கண்டிப்பதும், தண்டிப்பதும் மட்டும்தான் எங்கள் கடமையா? மாற்றி யோசித்த சேலம் மாநகர காவல்துறையினர்!

மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்ற பட்டியலில் இருக்கும் மாத்திரைகளை இந்த இளைஞர்கள் நண்பர் ஒருவரின் மூலம் பெங்களூருவிலிருந்து வாங்கியது தெரியவந்தது.

போதை ஊசிக்கு அடிமையான இளைஞர்களை பிடித்து கண்டித்ததோடு மட்டுமின்றி, மாற்றி யோசித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் சேலம் மாநகர காவல்துறையினர். எச்சரித்து அனுப்பினால் போதும் என விட்டு விடாமல் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது சேலம் ஆற்றோர மார்க்கெட் தெரு சாலை. இந்த சாலையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றிலிருந்த இளைஞர்களின் நடவடிக்கை அங்கிருந்தவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அவர்களை நோட்டமிட்டபோது அவர்கள் தங்களுக்கு தாங்களாகவே ஊசி செலுத்திக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பொதுமக்கள் அருகிலிருந்த டவுன் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், அங்கு வந்த போலீசார் மயக்க நிலையிலிருந்த இளைஞர்கள் ஏழு பேரையும் சுற்றி வளைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வந்த சொகுசு காரையும் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற போலீசார், அந்த காரில் சோதனை செய்ததில், அதில் மாத்திரை அட்டைகளும், குளுக்கோஸ் பாட்டில்களும், மனித உடலில் மருந்தை செலுத்தக்கூடிய ஊசிகளும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிடிபட்ட இளைஞர்கள் அனைவரும், வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை திரவமாக்கி அதை உடலில் செலுத்தி போதை ஏற்றிக் கொண்டது தெரிய வந்தது. இளைஞர்கள் அனைவரும் நிதானமின்றி இருந்த காரணத்தினால் அவர்கள் பெற்றோரை வரவழைத்து, மறுநாள் காலை விசாரணைக்கு வருமாறு கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். அதன்படி, தெளிந்த நிலையில் காலை வந்த இளைஞர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்ற பட்டியலில் இருக்கும் மாத்திரைகளை இந்த இளைஞர்கள் நண்பர் ஒருவரின் மூலம் பெங்களூருவிலிருந்து வாங்கியது தெரியவந்தது. இதுபோன்ற நடவடிக்கையால் பெரும் ஆபத்து இருக்கிறது என்பதை அறியாமல் இளம் தலைமுறையினர் பலர் இதில் சிக்கிக் கொள்வதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஒருவருக்கொருவர் உடலில் ஒரே ஊசியை மாற்றி மாற்றி செலுத்திக் கொள்வதால் பெரும் நோய் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே போதை ஊசி பயன்படுத்தி பிடிபட்ட இளைஞர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர், அதோடு மட்டும் இல்லாமல் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மருத்துவ கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினரே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடியாக கவுன்சிலிங்கை தொடங்க ஏற்பாடும் செய்தனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர்களுக்கு போதுமான நாட்கள் வரை கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் ஸ்ரீதர்,  நரம்பியல் மற்றும் உளவியல்
மருத்துவர் ஸ்ரீதர், நரம்பியல் மற்றும் உளவியல் PT Desk

பிடித்தோம், கண்டித்தோம், எச்சரித்தோம் என விட்டு விடாமல், இளைய தலைமுறையினர் இதுபோன்ற தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது என்ற சமூக அக்கறையோடு சேலம் மாநகர காவல் துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியதாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com