சேலம்: நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
ஆத்தூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வையப்பமலை, சுண்டங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மௌனீஷ் (11). இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பு பயின்று வந்தார். கொரானா நோய்த்தொற்று காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாததால் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துளுக்கனூர் ஆனைக்கல் மேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது துளுக்கனூர் ஏரியில் நண்பர்களுடன் மௌனீஷ் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சிறுவனை அப்பகுதியில் தேடியுள்ளனர். அதனைதொடர்ந்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் சிறுவனின் சடலம் மிதப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாம்: சென்னை: சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக இளைஞர் போக்சோவில் கைது