
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சேப்பெருமான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லோகநாதன் மற்றும் பாலாஜி. தறி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது செம்மாண்டப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுள்ளனர். அப்போது பின்னால் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் இவர்களது பைக் மீது மோதியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், மோதியவர்களை முறைத்துப் பார்த்துள்ளனர். அப்போது ’என்னடா முறைக்கிரீர்கள்’ என்று கூறி, இருவரையும் அடித்து தாக்கியுள்ளனர். இதையடுத்து காயமடைந்த இருவரும் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து லோகநாதன், பாலாஜியின் உறவினர்களான மணிகண்டன், ராமசாமி, அஜித், பூபாலன் ஆகியோர் பாலிகாடு காலனிக்குச் சென்று எதற்காக அடித்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த 10 பேர் கொண்ட கும்பல் ’எங்கள் ஊருக்குள் வந்து என்னடா நியாயம் கேட்கிறீர்கள், நாங்கள் ரவுடி கும்பல் அப்படி தான் அடிப்போம், நீங்கள் அடியை வாங்கிக் கொண்டு ஓடுங்கடா’ என்று கூறி, மீண்டும் 6 பேரையும் இரும்பு கம்பு, கட்டை ஆகியவற்றைக் கொண்டு அடித்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வருவதைக் கண்ட ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
தகவல் அறிந்த ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா மற்றும் போலீசார் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது தாக்குதல் நடத்திய கும்பல் மீது ஏற்கனவே ஓமலூர், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததாலேயே தாக்குதல் சம்பவம் நடந்ததாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
தொடர்ந்து தாக்கியவர்களும் தாக்குதலுக்கு உள்ளானவர்களும் வெவ்வேறு சமூகம் என்பதால் ஜாதி கலவரம் வரும் என அச்சமடைந்த காவல்துறை அதிகாரிகள் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி உள்ளிட்ட உட்கோட்டத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட போலீசாரை வரவழைத்து ஆங்காங்கே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் விசாரணை மேற்கொண்டார். செம்மாண்டப்பட்டி ஊராட்சி ஏனாதி மற்றும் பாலிகாடு பகுதியைச் சேர்ந்த ரவுடிகளை விரைந்து கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போதையில் அடாவடி செய்யும் ரவுடிகளை காவல்துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.