8 வழிச்சாலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
8 வழிச்சாலை திட்ட மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்தத் திடத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்குமா என்பது இன்று தெரியவரும்.
சென்னை, சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. அதற்கான நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இத்திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் திட்ட இயக்குனர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல்துறை அனுமதியை பெறுவதற்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆகவே நிலத்தை கையகப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று வாதிட்டடார்.
இந்த வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை தனது நிலைப்பாட்டினை தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவிற்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பாக இன்று முடிவு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.