
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் சுப்ரமணி, துரைராஜ். விவசாயியான இவர்கள் இருவரும் நடுவலூர் அருகே பனங்காடு பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கொட்டகை அமைத்து ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை பட்டியில் கட்டி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டனர். இதையடுத்து அதிகாலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியதில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 வெள்ளாடுகளும் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் உயிரிழந்த ஆடுகளை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அவரது தோட்டத்திலே அடக்கம் செய்தனர்.
மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.