150 டன் குப்பைக்கழிவுகளால் சேலத்தில் நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட 150 டன் குப்பைக்கழிவுகள் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து இடங்களிலும் சுகாதாரத்துடன் இருக்க, மாவாட்ட ஆட்சியர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட 150 டன் குப்பைக்கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் குப்பைகளுக்கு தீவைப்பதால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.