கனகசபை என்றால் என்ன? கனகசபை தொடர்பான தமிழக அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு சொல்வதென்ன?

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கனகசபை, கலையரசி நடராஜன்
கனகசபை, கலையரசி நடராஜன்ptweb

‘சிதம்பரம், நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழாவை ஒட்டி, ஜூன் 24 - 27 வரை கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை’ என கோவில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றினர். இதைத்தொடர்ந்து, தீட்சிதர்கள் பிரச்னை செய்யத்தொடங்கினர்.

சிதம்பரம்
சிதம்பரம்PT

முன்னதாக கடந்த ஆண்டு கனகசபையில் ஏறி பெண் பக்தர் ஒருவர் வழிபாடு செய்ய முயன்றபோது அதற்கும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதே இந்த விவகாரம் பெரிதான நிலையில் அரசியல் கட்சிகள் தீட்சிதர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதேசமயத்தில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. அந்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இப்போது பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும். மேலும் கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும்.

தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். அரசாணைக்கும் தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விவகாரம் பூதாகாரமாகி வரும் நிலையில், அரசியல் கட்சியினரில் அண்ணாமலை சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் செயலுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. வருடாவருடம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் விழாவின் முடிந்து நான்கு நாட்களுக்கு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை, பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே.

Annamalai | DMK | BJP
Annamalai | DMK | BJP

மக்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலை. தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்களை மட்டும் அல்ல, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை, அரசு அதிகாரிகளும், அமைச்சரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகாரவரம்பை மீறும் செயலாக, சென்ற ஆண்டு மே மாதம், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. கனகசபை மீது அனைவரும் ஏறி வழிபடலாம் என்ற அறிவிப்புடன் வெளியான அந்த அரசாணையைக் கூட, தீக்ஷிதர்கள் எதிர்க்கவில்லை. ஆனித் திருமஞ்சனம் விழாவின் போது, கோவில் நகைகள் அனைத்தும் தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக, நான்கு நாட்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. கனகசபை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இல்லாத ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து. கோவில் நடைமுறையில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில், கனகசபை என்றால் என்ன என்பதை காணலாம்.

கனககசபை என்பது குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய தமிழ் சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜன் கூறுகையில், “சிதம்பரம் என்பது வடமொழி சொல். தில்லை என்பது தான் தமிழ் சொல். சைவத்தில் தமிழ் மக்களுக்கு கோவில் என்று சொன்னால் அது தில்லை கோவில் தான். மற்ற கோவில்களுக்கு வேறு வேறு பெயர்களை சொல்வார்கள். மதுரைக்கு போனோம் மீனாட்சி அம்மனைப் பார்த்தோம் என்றும் வேறு கோவில்களுக்கு சென்றால் கடவுளின் பெயரைக் குறிப்பிட்டு அவரது கோவிலுக்கு போனோம் என்றும் சொல்வார்கள். ஆனால் கோவில் என்பதற்கு பொது என்பது பெயர். பொது என்பது சபையைக் குறிக்கக்கூடியது.

கனகசபை, கலையரசி நடராஜன்
கனகசபை, கலையரசி நடராஜன்ptweb

திருச்சிற்றம்பல மேடையில் (கடவுளை பக்தர்கள் எங்கு நின்று காண்கின்றார்கள், அந்த இடம்) இருந்து நடராசர் நடனமாடும் பேரம்பலத்தை (கடவுள் இருக்கும் இடம்) பார்ப்பது ஒரு நிகழ்வு. இந்த சிற்றம்பலம் பேரம்பலம் இரண்டையும் இணைத்து தான் கனகசபை என்கிறார்கள். கனகசபை என்பது வடமொழி சொல்தான். தமிழில் அதற்கு சிற்றம்பலம் பேரம்பலம் என்று பெயர்.

“கோவில் நகைகள் கொள்ளை போகிறது என்றால் வெளியில் இருந்தா வந்து திருடுகிறார்கள்?”

தில்லையைப் பொறுத்தவரை தீட்சிதர்கள் நீண்ட நெடுங்காலமாக அராஜகம் செய்துகொண்டுள்ளார்கள். சிற்றம்பலம் என்பது அர்த்தமண்டபத்தில் இருந்து இறைவனை பார்ப்பதற்கான ஒரு இடம். அப்படி நின்று மக்கள் பார்த்தால் அது தீட்சிதர்களுக்கு சமமாக ஆகிவிடுகிறதாம். நமக்கு சமமாக இவர்கள் பார்ப்பதா என அதை மறைக்கின்றனர். அவ்வாறு அங்கு நின்று மக்கள் பார்த்தால் இவர்கள் என்ன போட்டு அலங்காரம் செய்துள்ளார்கள் என்பதை மக்கள் கண்டுவிடுவார்கள் அல்லவா..

அதுபோல் கருவறையில் விளக்குகளை போடக்கூடாது என எந்த ஆகமத்திலும் சொல்லவில்லை. ஆனால் இன்று வரை கருவறையை இருட்டில் தான் வைத்திருப்பார்கள். ஏனென்றால் கடவுளுக்கு என்ன நகை போடுகிறார்கள் என்பது தெரிந்து விடக்கூடாது. கோவில் நகைகள் கொள்ளை போகிறது என்றால் வெளியில் இருந்தா வந்து திருடுகிறார்கள்?” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com