மூக்குப்பொடி சித்தர் மறைந்தார் !

மூக்குப்பொடி சித்தர் மறைந்தார் !

மூக்குப்பொடி சித்தர் மறைந்தார் !
Published on

திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த சாதாரண மக்கள் முதல் விஐபிகள் வரை வந்து சந்தித்த மூக்குப்பொடி சித்தர் இன்று காலை மறைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் தங்கி வந்த அவரது உயின் இன்று காலை பிரிந்தது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூக்குப்பொடி சித்தரை திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை சந்திக்க வந்திருக்கின்றனர். ஒரு முறை அமமுக தலைவர் டிடிவி தினகரன் சந்திக்க வந்தார். அதிலிருந்து மிகவும் பிரபலமானார் அவர்.

திருவண்ணாமலை என்றதுமே அண்ணாமலையார் திருக்கோயிலும், கிரிவலமும், பின்பு வாழ்ந்து மறைந்த சித்தர்களின் ஆசிரமமும்தான் நினைவுக்கு வரும். சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமணர், யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் மிகப் பிரபலம். இவர்களுக்கு உலகளவில் ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். பல வெளிநாட்டினவர்களை திருவண்ணாமலை வீதிகளில் மிகச் சாதாரணமாக பார்க்கலாம். திருவண்ணாமலை குகைகளில் இன்னும் கூட சில சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக உள் கிரிவலப் பாதைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சித்தர்களின் ஊரான திருவண்ணாமலையில் இருந்தவர்தான் மக்களால் மூக்குப்பொடி சாமியார் என்ற அழைக்கப்பட்ட சித்தர் இருந்தார்.  திருவண்ணாமலை கோவில் அருகில் நகரத்தார்களின் சாதுக்கள் மடத்தில் சில காலம் அவர் தங்கியிருந்தார். பெரிதாக யாரிடமும் பேசமாட்டார், அவர் ஒருவரை பார்த்துவிட்டால் கூட பார்க்கப்பட்ட நபருக்கு ஏராளமான நன்மைகள் நடக்கும் என நம்பப்படுகிறது. அவர் பார்வைபட்டாலே தோஷங்கள் விலகும் என்ற நம்பிக்கையில் மக்கள் வருகிறார்கள். மூக்குப்பொடியை வாங்கி வந்து காணிக்கையாக கொடுக்கிறார்கள். பல நாள்கள் சாப்பிடாமல்தான் இருப்பார். திடீரென ஏதாவது ஒரு ஹோட்டலுக்குள் நுழைவார், சாப்பிடுவார். இவரின் பார்வைக்காக பல மணி நேரமாக உட்கார்ந்திருந்த விஐபிகளும் இருக்கிறார்கள்.

எங்கிருந்து வந்தார் ?

மூக்குப்பொடி சித்தரின் உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம். அவருக்கு வயது 85 இவரது  மனைவி இறந்தபிறகு ஆன்மிகம் நாட்டம் கொண்டுள்ளார். சித்தரின் மனைவி இறந்த பிறகு, சுமார் 40 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் ஆன்மிக வாழ்வை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் யாரிடமும் பற்று செலுத்துவதில்லை.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். மூக்குப்பொடி சித்தர் மூன்று மாதத்துக்கு மேல் ஒரு இடத்தில் வசிக்க மாட்டார். சிதம்பரத்தில் அதிக காலம் தங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.                                   
                                                                                                              

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com