”யாத்வஷேம்” “காலா பாணி” நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் - முழு தகவல்கள்

”யாத்வஷேம்” “காலா பாணி” நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் - முழு தகவல்கள்
”யாத்வஷேம்” “காலா பாணி” நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் - முழு தகவல்கள்

’காலா பாணி’ நாவல் எழுதிய எழுத்தாளர் மு.ராஜேந்திரன், ’யாத் வஷேம்’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக நல்லதம்பி மற்றும் பூ நாச்சி என்ற நாவலை ஆங்கிலத்தில் the story of a black goat என்ற பெயரில் மொழிபெயர்த்ததற்காக என் கல்யாண ராமன் அவர்களுக்கும் சாகிதய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் நிலையில், ஆங்கிலம், கன்னடா, மலையாளம், மராத்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய ’காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

’காலா பாணி’நாவலுக்காக - மு.ராஜேந்திரன்!

1801ஆம் ஆண்டு நடைபெற்ற காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்டது 'காலா பாணி' நாவல். வேலு நாச்சியாரின் மருமகன் வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்டு, அவர்கள் உறவுகள் படும்பாடுகள் குறித்து எழுத்தாளர் மு. ராஜேந்திரன் நாவலில் பதிவு செய்திருப்பார். அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கைச் சூழல், பிரிட்டிஷ்காரர்களின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை இடம் பெற்ற இந்த நாவலுக்கு தற்போது சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் விருது கிடைப்பதால் புத்தகத்தின் மீதான கவனம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

'யாத்வஷேம்’ நாவலுக்காக- நல்லதம்பி!

கன்னட மொழியில் எழுத்தாளர் நியமிச்சந்திரா எழுதிய யாத் வஷேம் என்ற நாவலை அதே பெயரில் தமிழில் மொழிபெயர்த்ததற்காக நல்லதம்பி அவர்களுக்கு தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1940களில் இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளால் கைது செய்யப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்ட மனைவி மகள் மற்றும் மகன்களை விட்டு தப்பி ஓடி இந்தியாவின் பெங்களூரில் வந்து தஞ்சம் புகுந்த, அப்பா மற்றும் இளைய மகளின் பயணம் மற்றும் அவர்களது வாழ்க்கை குறித்த கதை தான் இந்த நாவல்.

தந்தை இறந்து விட பக்கத்து வீட்டார்களால் வளர்க்கப்படும் அந்த பெண் தனது 60 வயது கடந்த பிறகு தனது குடும்பத்தாரை சந்திக்க ஐரோப்பா அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களுக்கும், இஸ்ரேல் நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டு தனது உறவினரை கண்டுபிடித்தார் இல்லையா என்பது சம்பந்தமான கதையாக இது நகரும்.

‘பூ நாச்சி’ நாவலுக்காக- என் கல்யாண ராமன்!

அதேபோல தமிழில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூ நாச்சி என்ற நாவலை ஆங்கிலத்தில் the story of a black goat என்ற பெயரில் மொழிபெயர்த்ததற்காக என் கல்யாண ராமன் அவர்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாகித்ய அகாடமி விருதுகள் குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வெறுப்புணர்வும், வன்முறையும் மக்களை எந்த அளவுக்கு வதைக்கும் என்ற வலியைக் கூறி, காந்தியடிகள் காட்டிய அமைதிப்பாதையை வலியுறுத்தும் "யாத் வஷேம்" கன்னட நூலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக @sahityaakademi விருதுபெறத் தேர்வாகியுள்ள கே. நல்லதம்பி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விருது குறித்து அதிமுக சசிகலா பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட காலா பாணி நாவலை எழுதிய எழுத்தாளர் திரு.மு.ராஜேந்திரன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை முறையையும், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகளையும், 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரைப் பற்றியும் இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிந்திடும் வகையில் காலா பாணி நாவல் அமைந்திருப்பது மிகவும் பெருமைக்குரியது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் எழுத்தாளருமான திரு.ராஜேந்திரன் அவர்கள் காலா பாணி நாவலை போன்று தமிழர்களின் பண்டைய வரலாற்று சிறப்புகளை அனைவரும் அறிந்திடும் வகையில் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை அளித்திட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசியுள்ளார்.

தமிழ்நாடு ராஜ்பவன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ” '1801' காலா பாணி நாவலை எழுதிய மு.ராஜேந்திரன், நேமிச்சந்திராவின் யாத்வஷேம் கன்னட நூலை தமிழில் மொழிபெயர்த்த கே. நல்லதம்பி, பெருமாள் முருகனின் பூனாச்சி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கல்யாண ராமனுக்கு சாகித்ய விருதுகள் அறிவிக்கப்பட்டதை அறிந்தேன். அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com