கோவை : பெரியார் சிலை மீது காவிச்சாயம் - மர்ம ஆசாமிகள் அட்டூழியம்
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவிச் சாயம் ஊற்றி அவமரியாதை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. இது கடந்த 1995-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்ட மூன்று முக்கிய சிலைகளில் ஒன்றாக இருக்கிறது. திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை அருகே பல்வேறு விதமான போராட்டங்களும் பல்வேறு விதமான பெரியாரின் சிந்தனை நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக பெரியாரியல் சிந்தனையாளர்கள் மற்றும் வலதுசாரி சிந்தனையாளர்களுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அதனடிப்படையில் மர்ம ஆசாமிகள் அந்த பகுதிக்கு வந்து பெரியார் சிலை மீது காவி சாயத்தை பூசி விட்டு சென்றுள்ளனர். இதனை அறிந்த பெரியார் கருத்தாளர்கள் இன்று காலை அந்த பகுதியில் குவிந்துள்ளனர்.
சம்பவம் அறிந்த குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையின் அந்த பகுதிக்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் பெரியாரின் சிந்தனையை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடைபெற்றது. கோஷங்களை எழுப்பிய திமுக தொண்டர்கள் மற்றும் மதிமுக தொண்டர்கள் உடனடியாக காவி சாயம் பூசிய மர்ம நபரை கைது செய்ய வேண்டும் எனவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் எங்கு இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அந்த பகுதியில் போராட்டம் வெடிக்கும் என்றும் தமிழகம் தழுவி மிகப்பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் பெரியார் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் பெரியார் மேல் இருந்த சாயத்தை தண்ணீரை கொண்டு அவர்கள் அகற்றினர்.