கொடைக்கானல் மலைப்பகுதியில் குங்குமப்பூவை விளைவித்து விவசாயி சாதனை!
இமய மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடிய குங்குமப்பூவை, கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்
பல்வேறு அறிய மருத்துவகுணங்கள் கொண்ட குங்குமப்பூ, இந்தியாவின் இமயமலைப்பகுதிகளில் காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது. அந்த மருத்துவ மகத்துவம் நிறைந்த குங்குமப்பூவை, வரலாற்றின் முதன் முதலாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் முக்கிய பகுதியான கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவித்து மூர்த்தி என்ற விவசாயி சாதனை புரிந்துள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், சோதனை முறையில் 2011 ம் கொடுத்த ஒரு கிலோ குங்குமப்பூ விதைக்கிழங்கை, பல கட்டங்களாக பயிரிட்டு கிழங்கு உற்பத்தியை அதிகரித்துள்ளார். தற்பொழுது 22 கிலோ விதைக்கிழங்கை உருவாக்கி 2 செண்ட் நிலத்தில் சுமார் 500 செடிகள் நட்டு பூக்கள் உற்பத்தியை துவக்கியுள்ளார். மூன்று சூலகத்தண்டுகளுடன் செழித்து வளரத்துவங்கியுள்ள கொடைக்கானல் குங்குமப்பூ உற்பத்தி, தற்பொழுது சோதனை அடிப்படையில் மட்டும், மத்திய அரசின் உதவியுடன் நடைபெற்று வருவதாக அவர் கூறுகிறார்.
மேலும் இது குறித்து பேசிய விவசாயி மூர்த்தி, ''கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவை மத்திய மாநில வேளாண் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்படுகிறது. ஸ்ரீநகர் மலைப்பகுதிகளில் குங்குமப்பூ விளைவிக்கும் பரப்பளவு சுருங்கி வருவதால் வெளி நாடுகளில் இருந்து குங்குமப்பூ பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இந்த குங்குமப்பூ உற்பத்திக்கு சாதகமான குறைந்த பட்ச வெப்பநிலை நிலவும் பகுதிகளை கண்டறிந்து, விளைவிக்கும் பரப்பை அதிகப்படுத்த வேண்டும். உற்பத்தி அதிகமானால் குங்குமப்பூ இறக்குமதிக்காக செலவழிக்கப்படும் பலநூறு கோடி ரூபாய்கள் சேமிக்கப்பட்டு, மலைப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்கும். மத்திய அரசின் உதவி போல, மாநில அரசு இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குங்குமப்பூ உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு உதவ வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்