சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா! யார் இவர்?

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, நாளை காலை பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா
சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாPT Mail

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வுப் பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமியும் ஓய்வுபெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன்பின் கடந்த எட்டு மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி டி.ராஜா, மே 24ம் தேதியுடன் பணி ஓய்வுபெற்றார். இதன்பின் மே 25 முதல் மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிவருகிறார்.

high court
high courtpt desk

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சுதந்திர இந்தியாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் நீதிபதி கங்காபூர்வாலா, அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gangapurwala
Gangapurwala

கடந்த 1962ம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். எல்.எல்.பி. படிப்பிற்கான தகுதி பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தவர் இவர். வழக்கறிஞர் எஸ்.என்.லோயா என்பவரிடம் 1985 ஆம் ஆண்டு ஜூனியராக சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.

விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், கடன் வசூல் தீர்ப்பாயம் ஆகியவற்றில் வழக்கறிஞராக தொழில்புரிந்துள்ளார் இவர். சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாம்பே மெர்கன்டைல் ​​கூட்டுறவு வங்கி, ஜல்கான் ஜனதா சககாரி வங்கி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கும் வழக்கறிஞராக இருந்துள்ளார்.

1991 முதல் 2010 வரை எம்.பி. சட்டக் கல்லூரியில் கௌரவ பகுதி நேர விரிவுரையாளராக இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு மார்ச் 13ல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு டிசம்பர் 11 முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார்.

சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா
சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாPT Desk

தேசிய அளவில் புல்வெளி ஆடுகள டென்னிஸ் விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மார்த்வாடா பல்கலைக்கழகத்துக்கு ஆறு முறை விளையாடியதுடன், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் இரண்டு முறை தலைமையும் வகித்துள்ளார். மாநில அளவில் கூடைப்பந்து போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com