சேலத்தில் காரணமின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்களை அடையாளம் காண எஸ் ட்ராக் ஆப்
சேலத்தில் காரணமின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்களை எளிதில் அடையாளம் காண எஸ் ட்ராக் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயலியின் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார். சேலத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளியே வர மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி வரும் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று வண்ணங்களில் அடையாளப்படுத்தப்படுகிறது.
ஆனால் இதில் சிலர் நம்பர் பிளேட்களில் பூசப்படும் வண்ணத்தை அழித்துவிட்டு வெளியே சுற்றுவதாக சொல்லப்பட்டது. எனவே, வாகனங்களில் வெளியே வரும் நபர்களை எஸ் ட்ராக் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர். அதில், வெளியே வரும் நபர்களின் புகைப்படம், முகவரி, தொலைபேசி எண் பதிவேற்றம் செய்யப்படும்.
ஒரே நபர் தடை உத்தரவை மீறி இரண்டாவது முறை வெளியே வந்தால் எஸ் ட்ராக் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த முடியும் என கூறும் மாவட்ட நிர்வாகம், விதிகளை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளது.