“பழைய பொருளை புதிய கவரில் வைத்து விற்பனை”- I.N.D.I.A. குறித்து எஸ்.எஸ்.ஸ்ரீராம் கருத்து
காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான கூட்டணியை உருவாக்கி வரும் சூழலில் நேற்று அக்கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டணிக்கு INDIA (Indian national developmental inclusive alliance), அதாவது இந்திய தேசிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. திமுக, விசிக, மதிமுக போன்ற கட்சிகள் நேற்றைய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன.
இன்னொருபக்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 38 கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டன. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் அதிமுகவிற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. குறிப்பாக கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கவும், கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில் அவருக்கு அருகே அமரவும் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய தலைமுறையின் நேற்றைய நேர்பட பேசு நிகழ்வில் எதிர்கட்சிகளின் கூட்டணி பெயர் குறித்து கார சார விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தில் பேசிய வலதுசாரி ஆதரவாளர் எஸ்.எஸ்.ஸ்ரீராம், “UPA என பெயர் வைத்தாலே மக்களுக்கு ஊழல் பட்டியல் கண் முன் ஓடும். குடும்ப ஆட்சிகளும் ஓடும். இம்மாதிரியான விஷயங்களை தவிர்ப்பதற்கு பழைய பொருளை புதிய கவரில் வைத்து கொடுப்பது போல் தான் இது.
நீங்கள் வேண்டுமானால் அதை INDIA என அழைக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது I.N.D.I.A. (ஐ.என்.டி.ஐ.ஏ என தனித்தனியாக குறிப்பிட்டு) என தான் அழைக்க முடியும். 12 வருடங்களே அனுபவமான ஒரு கட்சி (ஆம் ஆத்மி) 100 வருட பாரம்பரிய கட்சியை (காங்கிரஸை) தங்கள் விஷயத்தில் (டெல்லி அதிகாரிகள் நியமனம்) பணியவைத்து ஒப்புதல் தர வைத்ததன் பின் தான் இந்த கூட்டத்தில் பங்கேற்போம் என கூறியது. இது ஜனநாயகம் அல்ல” என தெரிவித்தார். அவர் பேசியவற்றின் முழு விவரத்தை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.