இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களுக்கு நடனமாடிய ரஷ்ய கலைஞர்கள்
தமிழக நாட்டுப்புற நடனங்களை ஆடி அசத்திய ரஷ்ய நாட்டு நடன கலைக்குழுவினர், இளையராஜா இசைக்கு ரஷ்ய கலாச்சார நடனம் ஆடியும் அசத்தல்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திற்கு இந்திய - ரஷ்ய கலாச்சார பரிவர்த்தனை அடிப்படையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த நடன கலைக்குழுவினர் வருகை தந்துள்ளனர். ரஷ்ய நாட்டின் கிராமப்புற நடன கலைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தவும், இங்குள்ள பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை அறிந்துக்கொள்ளவும் வந்துள்ள இருபது பேர் கொண்ட இந்நடனக்குழுவினர் பார்வையாளர்கள் மத்தியில் இந்திய - ரஷ்ய கலாச்சார நடனங்களை வெகு நேர்த்தியாக ஆடிக்காட்டி அசத்தினர்.
குறிப்பாக தமிழகத்தின் நாட்டுப்புற நடனங்களை ரஷ்ய பெண் கலைஞர்கள் அவர்களது நடன பாணியில் ஆடியது, இளையராஜாவின் இசையில் உருவான தமிழ்ப் பாடல்களுக்கு ரஷ்ய நாட்டின் பாரம்பரிய நடனக்கலையான பாலே நடன பாணியில் ஆடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான பிரபல ஜெய் கோ பாடலுக்கும் நடனம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். நுனிக் காலை மட்டும் தரையில் ஊன்றி மின்னல் வேகத்தில் சுழன்றாடி தங்களது நாட்டின் பழம்பெரும் நடன கலைகளின் பெருமையை அறிமுகப்படுத்தினர் இந்த ரஷ்ய நடனக்குழுவினர்.
தமிழகத்தின் நாட்டுப்புறக் கலை நடனங்கள் ரஷ்யாவில் பிரபலம் என்றும் இந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரத நாட்டியத்தை ரஷ்ய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் எனக் கூறும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள், இது போன்ற கலாசார கலை பரிவர்த்தனை மூலம் இந்திய - ரஷ்ய உறவு மேலும் பலப்படும், இரு நாட்டு மக்களிடமும் ஒரு நெருங்கிய புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்கின்றனர். இரு நாட்கள் மேட்டுப்பாளையத்தில் தங்கவுள்ள இந்த ரஷ்ய நடன குழுவினர் இங்குள்ள கிராமப்புற இசை மற்றும் நடனங்களின் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்து வருகின்றனர்.