தண்டனை கைதிகளின் விடுதலை: பேரறிவாளனின் கேள்விக்கு ஆர்.டி.ஐ. பதில் !
தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை என ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஆர்டிஐ தகவல் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விடுதலைக்காக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. அதேபோல தனது மகனான பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம்மாளும் பல்வேறு விதமாக போராடி வருகிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் 7 பேரின் விடுதலைக்காக முயற்சி செய்தார். பின்னர் அதுவும் தாமதமானது.
இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சத்திற்கு கேள்வி எழுப்பி மனு அளித்திருந்தார். அதில், மத்திய அரசு விடுதலை செய்த தண்டனை கைதிகள் குறித்தும், இதற்காக மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் நகல்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அவர் கேட்ட 4 கேள்விகளில் ஒரு கேள்விக்கு மட்டுமே ஆர்டிஐ பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது தண்டனை கைதிகளின் விடுதலை தொடர்பான சட்ட விதிமுறைகள் குறித்த கேள்விக்கு, தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிமுறைகளும் மத்திய அரசிடம் இல்லை என ஆர்டிஐ தெரிவித்துள்ளது.