மதுரை கோவில்| ரூ.75 கோடி நில அபகரிப்பு வழக்கு.. முன்னாள் விஏஓ உட்பட 2 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவில் சேவைக்காக 1930-ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.75 கோடி மதிப்பிலான சொத்துகள் தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.75 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக பதிவான வழக்கில், அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் அரசன் மற்றும் இளையராஜா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி அரசன் மற்றும் இளையராஜா ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மதுரை மாவட்ட நீதிபதி சாய் சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகளை விற்பனை செய்ததில் இருவருக்கும் கூட்டுச்சதி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் அரசன் மற்றும் இளையராஜா ஆகிய இருவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி சாய் சரவணன் உத்தரவிட்டார்.

