“ஏழைகளுக்கு ஆண்டிற்கு 72 ஆயிரம் வருவாய் திட்டம்” - ராகுல் காந்தி அறிவிப்பு
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஏழை குடும்பங்கள் ஆண்டிற்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச வருவாயை பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நாட்டிலுள்ள ஏழை குடும்பங்கள் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச வருவாயை பெறுவதை உறுதிப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். ஏழை மக்களின் குறைந்த பட்ச வருமானத்தை உறுதி செய்யும், இது போன்ற திட்டம் உலகில் எங்குமே செயல்படுத்தப்பட்டதில்லை என்றும் தெரிவித்தார்.
இத்திட்டம் மூலம் 5 கோடி குடும்பங்களில் உள்ள 25 கோடி மக்கள் பலன் பெறுவார்கள் எனக் கூறினார். பல்வேறு பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்த, பின்னரே இத்திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்ததாகவும், அவர்களுக்கு நீதி தரும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.