அதிக வட்டி தருவதாக ரூ.7 கோடி மோசடி: பணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அதிக வட்டி தருவதாக ரூ.7 கோடி மோசடி: பணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அதிக வட்டி தருவதாக ரூ.7 கோடி மோசடி: பணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு
Published on

புதுக்கோட்டை அருகே அதிக லாபத்துடன் கூடிய வட்டி கொடுக்கப்படும் என 7 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூ ரைஸ் ஆலயம் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினால் மாதம் தோறும் எட்டாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை 20 மாதங்களுக்கு லாபத்துடன் கூடிய அதிக வட்டி கொடுக்கப்படும் என்ற திட்டமும் தீபாவளி பண்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தத் திட்டங்களை நம்பி சுமார் 250 பேர், 7 கோடி ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில், முதலீடு செய்தவர்களுக்கு இரண்டு மாதம் மட்டும் தவணைத் தொகை வந்துள்ளது. அதன்பிறகு எந்த ஒரு தொகையும் வரவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து முதலீடு செய்த தொகையை திருமயம் கிளை இயக்குனராக செயல்பட்ட தட்சிணா மூர்த்தியிடம் கேட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு தட்சிணா மூர்த்தி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன் பிறகு சிவகங்கை கிளையைச் சேர்ந்த இயக்குனர் ராஜு திருமயம் கிளைக்கு தற்காலிக இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். பின்னர் அவரிடமும் இது குறித்து கேட்ட நிலையில் எந்த தீர்வும் எட்டப்படாததால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்துள்ளனர். ஆனால், அந்த மனுவுக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட நபர்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு-வை சந்தித்து தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரியும் இதுபோன்று நிதி நிறுவனம் நடத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து அந்த திட்டங்கள் மூலம் ஏராளமானவர்களை ஏமாற்றி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மனு அளித்தனர்.

தங்களது பணத்தை மீட்டுக் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com