ஒரே நாளில் ரூ.60 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருப்பதி அருகே காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.60 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் சிக்கின.
திருப்பதியை அடுத்த ஏற்பாடு காவல்துறையினர் மாமண்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி வேன் ஒன்று சந்தேகத்திற்குள்ளான வகையில் வந்தது. அதனை காவல்துறையினர் சோதனை செய்தபோது, செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 509 கிலோ எடை கொண்ட 21 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த சித்தூர் மாவட்டம் தவனப்பள்ளியை தியாகராஜ் மற்றும் ஏர்வாரிபாளையத்தைச் சேர்ந்த மோகன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கர்நாடக மாநிலம் நியூ எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள கடிகனஹள்ளியைச் சேர்ந்த ஜாகீர்கான் மற்றும் பன்னாரகட்டாவைச் சேர்ந்த நவீன் ஆகியோருக்காக வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜாகீர்கான் மற்றும் நவீனை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2215 கிலோ எடை கொண்ட 86 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று மேலும் இருவேறு இடங்களில் நடத்திய சோதனையில் 2.7 டன் எடையுள்ள 107 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூபாய் 60 லட்சம் இருக்கும் என டி.எஸ்.பி ஸ்ரீனிவாசலு தெரிவித்தார்.