பொருளாதார மந்தநிலையால் இந்த ஆண்டு 5000 கோடி வர்த்தகம் பாதிக்கும்?

பொருளாதார மந்தநிலையால் இந்த ஆண்டு 5000 கோடி வர்த்தகம் பாதிக்கும்?
பொருளாதார மந்தநிலையால் இந்த ஆண்டு 5000 கோடி வர்த்தகம் பாதிக்கும்?

பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த வருடம் சுமார் 5000 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மொழி பேசும் பெரும்பான்மையான மக்கள் வாழும் நகரம் திருப்பூர். அந்த அளவிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் தொழில்தான் பின்னலாடை உற்பத்தி. பின்னலாடையை,  ஏற்றுமதி வியாபாரம்  மற்றும் உள்நாட்டு உற்பத்தி என இருவகையாக பிரிக்கலாம். இதில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் மட்டும் பின்னலாடை ஏற்றுமதியின் மூலம் 26 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது.

அந்நிய செலாவணி விகிதத்தை அதிகளவில் ஈட்டி தரக்கூடியது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி. அதே 2018-19 ஆம் வருடத்தில் உள்நாட்டு உற்பத்தி மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடியைத்தான் தாண்டும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். ஆனால், தற்போதைய நிலையில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருந்த பனியன் நிறுவனங்கள் தற்போது 12 மணி நேரம் மட்டுமே செயல்பட்டு அதனுடைய உற்பத்தியை குறைத்துள்ளது. நேரிடையாக 6 லட்சம் பேர் , மறைமுகமாக 4 லட்சம் பேர் என சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வந்த திருப்பூரில் சமீப நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். 

பின்னலாடை தொழிலில் பெரு நிறுவனங்கள் சுமார் 2000 கம்பெனிகளும் , சிறு குறு நிறுவனங்களாக மட்டும் சுமார் 8000 ஆயிரம் கம்பெனிகளும் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை என்பது சுமார் 60% அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள். ஒரு பனியன் உருவாக மொத்தம் 7 நிலைகளை கடந்து உருவாக வேண்டும் என்றும் , ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனியே ஜி.எஸ்.டி வரிகள் விதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பின்னலாடை ஏற்றுமதிகள் இல்லாதபோது கை கொடுக்க வேண்டிய உள்நாட்டு வியாபாரம் நிலவி வரும் பொருளாதாரா மந்த நிலையால் அதுவும் செயலற்ற நிலையிலேயே உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர் .

நடப்பு ஆண்டின் வியாபாரம் என்பது , 2018-19 ஆண்டுகளை ஒப்பிடும் போது , ஏற்றுமதியும் சரி , உள்நாட்டு வியாபாரமும் சரி சராசரியாக 30% அளவிற்கு குறையும் என கணிக்கின்றனர் உற்பத்தியாளர்கள். பின்னலாடை வியாபாரத்தில் ஆண்டு முழுக்க நடைபெற வேண்டிய மொத்த வியாபாரத்திற்கு நிகராக தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய இரு பண்டிகையின் போது மட்டும் விற்பனை நடக்கும், ஆனால் இந்த வருடம் தீபாவளி நெருங்கி வருகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் பின்னலாடை நிறுவனங்களுக்கு தெரியவில்லை என்றும் வேதனை தெரிவிகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com