உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதல்வர்
கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் முதல்வர் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என நடத்தப்பட்ட பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. இதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என கூறியுள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, பேரிடர் பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி உயிரிழந்த தகவல் அறிந்து தான் மிகுந்த வருத்தமுற்றதாகவும், மாணவியின் குடும்பத்திற்கு தன்னுடைய இரங்களை தெரிவித்துக்கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிலையில் மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் அதுமட்டுமன்றி இந்த சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.