அரசுப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.3 கோடியே 47 லட்சம்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் அரசுபேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த பைகளில் இருந்து 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில், 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். மொத்தம், 3 கோடியே 47 லட்சத்து 51ஆயிரத்து 100 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர், நடத்துநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போக்குவரத்துக்கழக ஊழியர் செல்வராஜ் அந்த பைகளுடன் பேருந்தில் ஏறியதாக கூறினர். அதனையடுத்து செல்வராஜிடம் தேர்தல் பறக்கும்படையினர், வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பணம் கொண்டுவரப்பட்ட பையில் இருந்து அடையாள அட்டையும், வங்கி கணக்கு புத்தகமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது. மேலும், போக்குவரத்துக்கழக ஊழியர் செல்வராஜும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.

