‘சுஜித் குடும்பத்திற்கு அரசு, அதிமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி’ - முதலமைச்சர் அறிவிப்பு

‘சுஜித் குடும்பத்திற்கு அரசு, அதிமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி’ - முதலமைச்சர் அறிவிப்பு
‘சுஜித் குடும்பத்திற்கு அரசு, அதிமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி’ - முதலமைச்சர் அறிவிப்பு

சுஜித் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் புகைப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். நடுக்காட்டுப்பட்டுக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர், சுஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “சுஜித் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது முதல் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் அங்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை கவனிக்க வேண்டும் என நான் கூறினேன். அதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உதயகுமார் ஆகியோர் அங்கேயே முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் ஓஎன்ஜிசி, ஐஐடி, அண்ணாப்பல்கலைக் கழகம் உள்ளிட்ட குழுக்கள் ஈடுபட்டன. அனைவரும் சேர்ந்து குழந்தையை உயிருடன் மீட்க முயற்சி செய்தோம். 

ஆழ்துளைக் கிணற்றில் இதற்கு முன்னர் குழந்தை விழுந்த போதெல்லாம் இதுபோன்ற நவீனப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த முறை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் பணிகள் நடைபெற்றன. 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சிறுவனை உயிரோடு மீட்கவில்லை என கூறிவிட்டு சென்றுள்ளார். இங்கு நடந்ததை ஊடகங்கள் உடனே வெளியிட்டன. அமைச்சர்கள் உட்பட அனைவரும் எப்படி பணியாற்றினார்கள் என அனைவருக்கும் தெரியும். ராணுவத்தை வரவழைத்திருக்கலாம் என ஸ்டாலின் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். நாங்கள் இப்போதும் அனைத்து நிபுணர்களையும் வைத்து தான் பணியாற்றியுள்ளோம். 

திமுக ஆட்சிக்காலத்தில் 6 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது, இறந்த பின்னர் தான் சிறுவனை மீட்டனர். அப்போது இந்த அளவிற்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தவில்லை. ஆனால் ஸ்டாலின் எங்களை குறை சொல்கிறார். ஸ்டாலின் வேண்டுமென்ற தவறான தகவலை கூறி, அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார். சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com