ஆர்.கே.நகரில் 450 பேருக்கு தலா ரூ.20 விநியோகம்?
ஆர்.கே.நகரில் 450 பேருக்கு தினகரன் ஆதரவாளர்கள் 20 ரூபாய் நோட்டு கொடுத்ததற்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ரூபாய் நோட்டை டோக்கன் போன்று கொடுத்து பணம் விநியோகிப்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், டிடிவி தினகரன் ஆதரவாளரான ஜான் பீட்டரிடம் தனக்கு ஏன் 20 ரூபாய் நோட்டு கொடுக்கவில்லை என கேட்டதாக தெரிகிறது. அப்போது தினகரன் ஆதரவாளர்கள் தன்னை தாக்கிவிட்டதாக கார்த்திகேயன் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதன்பேரில், ஜான் பீட்டர், சரண்ராஜ், ரவி, செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டையில் 450 பேருக்கு 20 ரூபாய் நோட்டு கொடுத்ததை ஜான் பீட்டர் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த வரிசை எண்களை கொண்ட, ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.