உக்ரைன் நாட்டில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: தம்பதியர் கைது
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளத்தை அடுத்த எல்லப்பாளையம் கிழக்கு வீதியில் வேலுச்சாமி - தனலட்சுமி தம்பதியினர் தங்களது மகன் ஜோஹித்துடன் வசித்து வந்துள்ளனர். வேலுச்சாமி சொந்தமான ஜேசிபி வைத்து வேலை செய்தும், தனலட்சுமி ஆவினில் தற்காலிக ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தனலட்சுமியுடன் தொழில்ரீதியாக பழக்கமான கவுந்தப்பாடியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் கவியரசு, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனலட்சுமி தனது மகன் ஜோஹித் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பயின்று வருவதாகவும், உங்கள் மகனையும் அங்கு சேர்த்து விடுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய கவியரசு 7 லட்சத்து 55 ஆயிரமும் மற்றும் அவரது நண்பர் நவீன்வர்ஷன் 7 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை பல தவணைகளாக தம்பதியினரிடம் செலுத்தியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதியர் டூரிஸ்ட் விசாவில் மாணவர்கள் இருவரையும் உக்ரைனுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இருவரையும் ஜோஹித் தங்கியிருந்த அறையில் தங்க வைத்து கல்லூரிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த இருவரும் ஜோஹித்திடம் கேட்டுள்ளனர். அப்போது முதலாம் ஆண்டு பாடத்தை அறையில் வைத்து கற்றுத்தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவியரசு மற்றும் நவீன்வர்ஷன் ஆகிய இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையறிந்த ஜோஹித் இருவரையும் உள்ளூர் ஆட்களை வைத்து மிரட்டி அனைத்து ஆவணங்களையும் பிடிங்கி வைத்துள்ளார்.
இதையடுத்து உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மூலம் இருவரை மீட்டு ஈரோடு அழைத்து வந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வேலுச்சாமி - தனலட்சுமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உக்ரைனில் இருக்கும் ஜோஹித்தைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.