கொசுக்களை உற்பத்தி செய்த குடோனுக்கு 1 லட்சம் அபராதம்
திருவாரூரில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் இருந்த பிளாஸ்டிக் குடோனுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 15 நாட்கள் ஈடுபட வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வரும் ஆட்சியர், அரசவணங்காடு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் உள்ள லாரி டயரில் கொசுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்து அந்த நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு 700 நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

