ரவுடி ஸ்ரீதரின் உடல் தகனம்: முன்னெச்சரிக்கையாக 50 பேர் கைது
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் உடல் நேற்று இரவு தகனம் செய்யப்பட்டது.
கம்போடியாவில் கடந்த 4 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதரின் உடல், விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீதரின் வீடு உள்ள திருப்பருத்திக்குன்றம் செல்லும் அனைத்து வழிகளும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. சோதனைக்கு பிறகே வாகனங்கள் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஸ்ரீதர். போலீசால் தேடப்பட்டு வந்த இவர் இந்தியாவில் இருந்து தப்பித்து துபாய் சென்று பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இதனிடையே அவரது 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியது. இந்நிலையில் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாக கடந்த அக். 4 ஆம் தேதி காவல்துறை அறிவித்தது.