கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டது ரவுடி ஸ்ரீதர்தான் என்பது உறுதிசெய்யப்பட்டால்தான் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஸ்ரீதரின் உடலை பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக கம்போடியா சென்ற அவரது மகள் தனலட்சுமி, உடலை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறி திரும்பிவிட்டார்.
தூதரக உதவியுடன் தந்தையின் உடலை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் தனலட்சுமி மனு அளித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், இறந்தது ஸ்ரீதர்தானா என்பது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதன் பின்னர் அவரது உடலை இந்தியா கொண்டு வருவது குறித்து அரசு முடிவெடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.