சென்னை அம்பத்தூரில் டாஸ்மாக் பாரில் ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூர் திருவள்ளுவர் நகர் அண்ணா இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஹரிதாஸ்(42), ஆட்டோ டிரைவரான இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது. இவர் நேற்றிரவு அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது வாங்கிக் கொண்டு, பாரில் அவரது நண்பர்களான கரிகாலன், நெப்போலியன், தாஸ் உள்ளிட்ட 5 பேருடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக ஹரிதாஸை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஹரிதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ஹரிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய கரிகாலன், நெப்போலியன், தாஸ் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். டாஸ்மாக் பாரில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.