ஜாமீனில் வந்த இரண்டே நாளில் ரவுடி வெட்டிக் கொலை
நாகை அருகே ஜாமீனில் வந்த ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்தவர் அப்பு என்ற செல்வராமன். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவரான ரவுடி அப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று இரவு உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் சிலர் ரவுடி அப்புவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
பரவை வடுவூர் சாலையில் தலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அப்புவை, அந்த வழியே சென்ற பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ரவுடி அப்புவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அப்பு இரண்டு தினங்களிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வேளாங்கண்ணி போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும், குற்றவாளிகள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.