பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி பினு கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படையினர் அவரை தேடி வந்தபோது பிப்ரவரி 13-ஆம் தேதி ரவுடி பினு காவல்துறையினரிடம் சரணடைந்தார். அவர் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுமார் 3 மாதங்களாக வேலூர் சிறையில் இருந்த பினுவுக்கு கடந்த 23-ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டுமென பினுவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 1 வாரமாக அவர் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடி பினுவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.