தீர்த்துக் கட்ட ஜெயிலில் திட்டம்: பினு வேலூர் சிறைக்கு மாற்றம்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி பினு பாதுகாப்பு நடவடிக்கையாக வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
சென்னையில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதியன்று, பிரபல ரவுடி பினுவின் பிறந்தாள் விழாவில் கூடிய 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். பினுவை காவல்துறையினர் நெருங்கிய நிலையில் 13-ம் தேதியன்று அவரே சரணடைந்தார். அவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைதொடர்ந்து பினுவின் எதிர் தரப்பினர் என கூறப்படும் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பினுவின் கூட்டாளியான தட்சிணாமூர்த்தியை கொலை செய்ய, ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் புழல் சிறையில் திட்டம் தீட்டியதாக சிறைத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
இதனையடுத்து, பினு மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதேபோல், ராதாகிருஷ்ணனை கடலூர் சிறைக்கும், ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் 7 பேரை பூந்தமல்லி கிளைச்சிறைக்கும் மாற்றி சிறைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.