''சிகரெட்டை பற்ற வை'' - போதையில் ரகளை செய்த ரவுடி
சென்னை காசிமேடு பகுதியில் உணவகத்திற்கு சென்ற ரவுடி ஒருவர் குடிபோதையில் அங்கு ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நாஞ்சில் ரவி என்பவர் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அருகே உணவகம் நடத்தி வருகிறார். அவரது கடைக்கு சென்ற ரவுடி ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்துக் கொடுக்கச் சொல்லியும், ஜூஸை ஊட்டி விடும்படியும் உணவக ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் உணவகத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்களை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில் உணவகத்திற்கு வந்த ரவுடி தண்ணீர் ஜக் மற்றும் நாற்காலியை எடுத்து ஊழியர்களை தாக்குவது, அருகில் இருந்த கடையில் புகுந்து சிகரெட் பாக்கெட்டை திருடி செல்வது பதிவாகி உள்ளன. சம்பவம் குறித்து தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினர் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியான காசிமேடு பகுதியை சேர்ந்த பிரேம் என்கிற பிரேம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காசிமேடு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

