
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலை இல்லத்தில், வெளியில் 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அனுமதி பெறாமல் வைத்த இந்தக் கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என பனையூர் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் கொடிக் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட முயன்றபோது, பாஜகவினர் கிரேன் வாகன கண்ணாடியை உடைத்துவிட்டனர்.
கிரேன் வாகன கண்ணாடியை உடைத்த பாஜகவினர் கன்னியப்பன்(37), பாலகுமார்(35), ரமேஷ் சிவா(33), பாலவினோத் குமார்(34) உள்ளிட்ட 6 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், ஆபாசமாகப் பேசுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொதுச் சொத்தை சேதப்படுத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கானாத்தூர் காவல்துறையினர் 5 பேரைக் கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி மட்டும் தலைமறைவானார். தவிர, கொடிக் கம்பத்தை அகற்ற இடையூறு செய்த பாஜகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோரை கைதுசெய்து வைத்துள்ளனர். தற்போதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அமர்பிரசாத் ரெட்டியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, நீதிமன்ற வாயிலில் பாஜகவினர், காவல்துறை மற்றும் திமுக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மெஜிஸ்திரேட் வர்ஷா உத்தரவிட்டுள்ளார்.