ரூ.20 லட்சத்தை பறிக்க முயன்ற கொள்ளையர்கள்.. துணிச்சலாக செயல்பட்ட பாதுகாவலர்..!
தனியார் நிறுவன அதிகாரியிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி கும்பல் பறிக்க முயற்சித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவன அதிகாரியான கிரிஷ், பணி நிமித்தமாக பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார். 20 லட்சம் ரூபாய் பணத்துடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், இருசக்கர வாகனத்தில் தி.நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் மூவர், கிரிஷிடம் இருந்த 20 லட்சம் ரூபாயை பறிக்க முயன்றனர்.
இதனையடுத்து அங்குள்ள கடையில் புகுந்து தப்பிக்க நினைத்த கிரிஷை, கொள்ளையர்கள் விரட்டிச் சென்றனர். கடையின் பாதுகாவலர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதால், பயந்துபோன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.