காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்திலிருந்த இயந்திரத்தை அடித்து உடைத்த மர்ம நபர்கள், கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததைக் கண்ட அவர்கள், தப்பியோடி உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாலுச்செட்டி சத்திரம் போலீசார், கைரேகை தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே தமிழகத்தை உலுக்கிய திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்த சில தினங்களிலேயே கடந்த மாதம் மார்ச் 10 ஆம் தேதி அதிகாலை காஞ்சிபுரத்தையடுத்த வாலாஜாபாத் அருகே திம்மராஜாம்பேட்டை பகுதியில் செயல்படும் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது போலீசார் ரோந்து வாகனம் வந்ததைத் தொடர்ந்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.