அடையார் வங்கியை தேர்ந்தெடுத்தது ஏன்?: வங்கி கொள்ளையனின் பகீர் வாக்குமூலம்

அடையார் வங்கியை தேர்ந்தெடுத்தது ஏன்?: வங்கி கொள்ளையனின் பகீர் வாக்குமூலம்

அடையார் வங்கியை தேர்ந்தெடுத்தது ஏன்?: வங்கி கொள்ளையனின் பகீர் வாக்குமூலம்
Published on

சென்னை அடையாரில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு கைதான மணீஷ்குமாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை அடையார் இந்திரா நகர் முதல் அவென்யூவில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் எடுக்கவும், செலுத்தவும் காத்திருந்தனர்.அப்போது ஹெல்மெட் அணிந்தபடி வங்கிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் நேராக மேலாளர் அறைக்கு சென்றுள்ளார். அங்கு முகத்தை மூடியபடியே கடன் குறித்த விவரங்களை கேட்டிருக்கிறார். தனது நடவடிக்கைகளில் மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதை உணர்ந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். வங்கி மேலாளரையும் அங்கிருந்தவர்களையும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த நபர், காசாளர் அறைக்குச் சென்று அவரிடத்தில் இருந்த 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

வங்கியில் கொள்ளையடித்து தப்பியோடிய இளைஞர் பற்றி அவரை பின்தொடர்ந்து வந்த வாடிக்கையாளர் ஒருவர், போக்குவரத்து காவலர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அதன்பேரில், அடையார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜோசப், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும்‌ அன்வர் ஷெரிஃப் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று கொள்ளையனை மடக்கி பிடித்துள்ளனர். பொதுமக்களை மிரட்டுவதற்காக துப்பாக்கியை எடுத்தபோது எதிர்பாராதவிதமாக அதிலிருந்து குண்டு வெடித்ததால் அங்கு திடீர் பரபரபரப்பு ஏற்பட்டது.

கைதான கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பீகாரைச் சேர்ந்த மணிஷ் குமார் என்பது தெரியவந்தது.அவரிடம் இருந்து 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாக‌னம், செல்போன், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 4 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.  

பிடிபட்ட மணீஷ் குமார் போலீசாருக்கு அளித்த வாக்கு மூலத்தில்  “கடந்த 5 ஆண்டுகளாக சென்னை கேளம்பாக்கத்தில் வசித்து வருகிறேன். பல்வேறு வேலை செய்ததாகவும், அதில் மாதம் வெறும் 2000 என சொற்ப தொகையே கிடைத்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேலை பார்த்தும் பணம் சம்பாதிக்க முடியவில்லை. தள்ளுவண்டியில் ஐஸ் விற்க செல்லும் போது இந்த வங்கியில் கொள்ளையடித்தால் என்ன என்று யோசித்தேன். ஏற்கனவே ஊரில் வாங்கி வைத்திருந்த துப்பாக்கியை வைத்து மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என எண்ணினேன். வங்கியில் சென்று லோன் வேண்டும் என்பது போல நடித்து கொள்ளையடித்தேன். மாட்டியும் கொண்டேன்” என தெரிவித்தார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் மணீஷ் குமார், ஆங்கிலம் நன்கு பேசக்கூடியவர். இதுவே அவர் ஈடுபட்ட முதல் குற்றச்சம்பவம், இதற்குமுன் வழக்குப்பதிவு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவர் மீது ஆயுத தடைச்சட்டம், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளையில் கடந்த 2012ல் நடந்த வங்கிக் கொள்ளையில், வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறை என்கவுன்டர் செய்தது.அதன்பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வங்கிகளுக்கு காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது. வங்கி மற்றும் ஏடிஎம்கள் பாதுகாப்புக்கு காவலாளிகளை நியமிப்பது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில் அடையார் இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்திருப்பது, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. 

கொள்ளை நடந்த வங்கியில் காவலாளி இல்லை என்பதால்தான் ஹெல்மெட் அணிந்து கொள்ளையனால் வங்கிக்குள் வர முடிந்ததாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். கொள்ளையனை வாடிக்கையாளர்களே துரத்தி பிடித்து விட்டதால் பணம் தப்பியது. ஆனால், எல்லா நேரத்திலும் இதுபோல் நடக்க வாய்ப்பில்லை.வருமுன் காப்பதே நல்லது என்பதை இனியாவது வங்கிகள் உணர வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com