சென்னை பாரிமுனையில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில் இடிக்கப்பட்டது.
சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை அரண்மனைகார தெரு சந்திப்பில் ஓம் சக்தி மாரியம்மன் கோயில் என்ற தெருமுனை கோயில் இருந்தது. கோயில் பூசாரியாக அப்பகுதியை சேர்ந்த திருநங்கை புஸ்பா என்பவர் இருந்து வந்தார். இந்த கோயில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகவும், கோயிலுக்கு அருகில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பாகவும் அப்பகுதியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மண்டல அலுவலர் லாரன்ஸ் மற்றும் காவல் துறை உதவி ஆணையாளர் விஜயராமலு தலைமையிலும், போலீஸார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கோயில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.