20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் ரூபாய் எங்கே ? தினகரனுக்கு எதிராக பெண்கள் போராட்டம்
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரனுக்கு எதிராக, பெண்கள் 20 ரூபாய் நோட்டுகளைக் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன், தனது தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரில், தண்ணீர் பந்தல் திறந்து வைப்பதற்காகச் சென்றார். அப்போது 30க்கும் மேற்பட்ட பெண்கள், 20 ரூபாய் நோட்டுகளுடன் தினகரனை முற்றுகையிடச் சென்றனர். தேர்தல் நேரத்தில் 20 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக அளித்து வாக்கு கேட்டதாகவும், பின்னர் பணம் தருவதாகக் கூறி தினகரன் ஏமாற்றி விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். தினகரனை முற்றுகையிடச் சென்றவர்களை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கிடையே தண்ணீர் பந்தலை திறந்துவைத்து விட்டு தினரகன் வீடு திரும்பினார்.