குப்பைக் கிடங்கில் இருந்து விடிவு கிடைக்கலையே: ஆதங்கத்தில் ஆர்.கே.நகர் மக்கள்
இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அங்குள்ள குப்பைக் கிடங்கால் நிறைய பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியின் எல்லையோரப் பகுதிகளான எழில் நகர், கண்ணகி நகர், தமிழ் நகர், நேதாஜி நகர் ஆகியவற்றை ஒட்டி கொடுங்கையூர் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இக்குப்பை கிடங்குதான் ‘சிங்காரச் சென்னையின்’ எல்லா குப்பைகளுக்கும் கடைசி வசிப்பிடமாக உள்ளது.
உள்ளே நுழைகிற போதே எரியும் குப்பையின் புகை மூட்டம், சுவாசக்குழலை அடைக்கிறது. அழுகும் குப்பைகளும், தேங்கிக்கிடக்கும் கழிவுகளும், மலையென குமிந்திருக்கும் குப்பையும், வெறி நாய்களின் கூட்டமும் நம்மை வரவேற்கின்றன. இந்தக் குப்பைக்கடலுக்குள் நீந்திதான் பிழைத்தும் வாழ்ந்தும் வருவதாகச் சொல்கின்றனர் அப்பகுதி வாசிகள்.
மாநகராட்சி வாகனங்களைத் தவிர அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தொழில் நிறுவனங்களும், வேறு சில தனியார் நிறுவங்களும் இங்கு குப்பைகளைக் கொட்டுவதாக புகார் தெரிவிக்கும் எழில் நகர் வாசிகள், அந்த நிறுவனங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்றும் கேள்வி எழுப்புகின்றனர். யார் யாரோ கொட்டும் குப்பைகளின் தாக்கத்தினால் முறையான மருத்துவ வசதிகள்கூட இல்லாமல் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் அப்பகுதி கர்ப்பிணி பெண்கள்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு சில மீட்டர் தொலைவிலேயே நேதாஜி நகர் மற்றும் பட்டேல் நகர் பகுதிகள் அமைந்துள்ளன. குப்பை கிடங்கின் எல்லையில் தான் பட்டேல் நகர் மாநகராட்சி பள்ளி உள்ளது. குப்பை கிடங்கின் தாக்கத்தால், பள்ளி மாணவர்கள் அடிக்கடி மயங்கி விழுவதாகவும், அப்பகுதி குழந்தைகள் அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இக்குப்பை கிடங்கு பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக முறையான திடக்கழிவு மேலாண்மை திட்டங்களே பயனளிக்கும் என்கின்றனர் அப்பகுதிவாசிகள்.